அனைத்தையும் அறிவோம் அவனியில் வளர்வோம்
Wednesday October 26th 2016

புதினப் பூங்கா 08.10.16

பச்சிளம் குழந்தைக்கு ஏனிந்தத் தண்டனை?

newborn

வயதாளிகளாக வந்ததும் நமக்கு குழந்தைத்தனமும் வந்துவிடுவதாக அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கேயோ பிறந்த அடுத்த கணமே குழந்தை வயதாளியாக மாறியிருக்கின்றது.

ஒரு பொல்லாத வியாதி (Progeria) இந்தக் குழந்தையை பீடித்ததால் வந்த வினைதான் இது.

பங்களாதேஷ் நாட்டின் மகுறா என்ற இடத்தில் பிறந்த இக் குழந்தை முகத்தில் சுருக்கங்களுடனும், குழி விழுந்த கண்களுடனும் , சுருங்கிய உடலுடனும், முதுகில் கத்தை கத்தையாக உரோமங்களுடனும் 80 வயது முதியவரின் தோற்றத்தில் இருக்கின்றதாம் இந்த பச்சிளங் குழந்தை.

என்ன கொடுமை பார்த்தீர்களா?

இப்படியொரு தாக்கம் பிறக்கும் 4 மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத்தான் ஏற்படுமாம்.

குழந்தையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயிருக்கின்றார்கள்.; பிறந்த குழந்தை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டிருப்பதால்தான்,   இப்படி ஒரு வயதாளியாக மாறியிருக்கின்றது.

ஆனால் பெற்றோர்களின் மனநிலை வேறாக இருக்கின்றது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல இப்படி ஒரு புதுமையான குழந்தையை கடவுள் எமக்குக் கொடுத்ததற்கு நன்றி கூறுகின்றோம் என்று அகமகிழ்வோடு இவர்கள் கூறுகின்றார்கள். கடவுள் தந்தபடியே நாம் குழந்தையை ஏற்றுக் கொள்கின்றோம்.ஏற்கனவே எங்களுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள். இப்பொழுது ஆண்குழந்தை. மகிழ வேண்டிய விடயந்தானே என்கிறார்கள் இவர்கள்.

பொதுவாக இப்படிப் பிறக்கும் குழந்தைகள் 13 வயதுக்கு மேல் வாழ்வதில்லை என்கிறார்கள். மருத்துவர்கள்.

பாவம் இந்தப் பெற்றோர்கள். இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகின்றார்கள்?

பணம் என்ன பாவம் செய்தது?

8-iphones

அப்பிள் கைபேசிகள் பலரையும் மயக்குபவை. விற்பனையாகும் முதல் நாளன்று மணிக்கணக்காக காத்துநின்று பாவனையாளர்களை வாங்க வைப்பவை.

அந்த ஐபோன்கள் வரிசையில் புதிதாக அறிமுகமாகியதுதான் ஐபோன்7. நமது ஊர் விலையில் ஒன்று வாங்குவதாயின் சுளையாக ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை வேண்டும்.

புதிய ஐபோன் சீனாவில் விற்பனைக்கு வந்தபோது அதே காத்திருப்புகள். ஹொங்ஹொங் வழியாக கள்ளக் கடத்தல் மூலம் கொண்டு வரவும் பலர் முயன்றுள்ளார்கள்.

இது இப்படியிருக்க ஒரு சீனக் கோடீஸ்வரச் சீமானின் மகன் எட்டு புதிய  ஐபோன்களை வாங்கி தன் செல்ல நாய்க்கு முன்பு அபிஷேகம் செய்தவர். பின்பு இதைப் படமெடுத்து சமூகவலைத் தளமொன்றிலும் பதிவுசெய்திருக்கின்றார்.

இதை எப்படி விபரிப்பது? பணக்கொழுப்பு என்ற பதத்தை உபயோகிக்கலாமோ?

இந்த அல்ஷேஸன் இன நாயின் பெயர் கொக்கோ. சீனாவின் கொழுத்த பணக்காரர் (இவரது சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர்களாம்) ஒருவரின் மகன்தான் இப்படிச் செய்திருக்கின்றார்.

சீனாவில் ஐபோன் 7 பிளஸ் 7988 யுவான்(1047 டாலர்கள்) பெறுமதியானது.

வாங் என்ற பெயர் கொண்ட இந்த இளைஞர் முன்பொரு தடவை நாயை இரண்டு அப்பிள் கடிகாரங்களை அணிய வைத்து மேலும் 37000 டாலர் பெறுமதியான ஆடம்பரப் பொருட்களையும் நாய்க்கு அருகே வைத்து ஒரு படமெடுத்து அதை சமூகவலைப் பக்கமொன்றில் பதிவேற்றி பலரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.

இவர் அப்பிள் நிறுவனத்தின் உறபத்திகளை இழிவுபடுத்த முயலகின்றாரா அல்லது மிதமிஞ்சிக் கிடக்கும் பணத்தை எப்படி ஊதாரித்தனமாக செலவிடுவது என்று பாடஞ் சொல்லிக் கொடுக்கின்றாரா?

பரிசளிக்கும் நேரம் இது

nobel_1003

நோபல் பரிசு பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். வருடாவருடம் கொடுக்கப்படும் இந்த உலகப் புகழ்பெற்ற உன்னதமான பரிசுக்குரியவர்களை இந்த மாதத்தில்தான் தெரிவு செய்கின்றார்கள்.

இரசாயணம், இலக்கியம்,  பௌதீகம்,  மருத்துவம் அல்லது உளவியல்,  சமாதானம்-இந்த ஐந்து துறைகளுக்குந்தான் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2016இன் சமாதானத்திற்கான நோபல் பரிசு கொலம்பிய ஜனாதிபதி மனுவல் சன்ரோஸ் என்பவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதுää முழு உலகையும் வியப்பிலும்,  மகிழ்சிசியிலும் ஆழ்த்தியுள்ளது.

50 வருட உள்நாட்டு யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதியை விட  இந்தப் பரிசுக்கு பொருத்தமான வேறொருவர் இருக்க முடியாது என்கிறது பரிசுத் தேர்வுக்குழு.

சுவீடன் நாட்டு இரசாயணவியலாளரும், பொறியியலாளரும்,   டைனமைட் உட்பட 355 கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரருமான  அல்பிரெட் நோபலின் பெருஞ் சொத்தே வருடாவருடம் பரிசுகளாக பங்கிடப்படுகின்றது.தன் கண்டுபிடிப்பான டைனமைட் அழிவுப் பொருளாக பலரை அதிருப்திப்படுத்தியதால் மனம் நொந்து தனது கடைசி உயிலில் தன் சொத்தை,  சமுதாயத்திற்கு பெரும் சேவை செய்பவர்களுக்கு வருடாவருடம் பிரித்துக் கொடுக்கும்படி எழுதியிருந்தார்.

தன் முழுச் சொத்தின்( 2008இல்186 மில்லியன் டாலர்)94 வீதமான பகுதியை பரிசுகளுக்காகவே ஒதுக்கிய உன்னத புருஷர் இவர். 1901இலிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில் 900 தனிப்பட்டவர்களுக்கும்,  அமைப்புகளுக்கும் 573 தடவைகள் பரிசளிக்கப்பட்டுள்ளன. 1980 வரையில் கொடுக்கப்பட்ட பதக்கங்கள் 23 காரட் தங்கத்திலானவை. அதன்பின்பு 18காரட்டில் பதக்கம் செய்து அதற்கு மேல் 24 காரட் பூச்சோடு பதக்கத்தை பரிசளிக்கிறார்கள்.

 

கூடு மாறாத குஞ்சுகள்

italy-youths

பொதுவாகவே ஐரோப்பிய இளைஞர்கள் யுவதிகள் 18 வயதைத் தாண்டியதும் படிப்பை முடித்துக் கொண்டு,  ஒரு வேலைiயும் தேடிக்கொண்டு,  தனி வாழ்க்கைக்குத் தயாராகி விடுவார்கள். ஒரு சினேகிதனோ சினேகிதியோ அதற்குள் தேடப்பட்டு விடும். (அவர்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்படுவார்கள் என்பது தனிக் கதை)

ஆனால் சமீபத்தில் எடுத்த ஆய்வொன்று நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது.பெரும்பாலான நாடுகளில் பிறந்த வீடே கதி என்று பெருந்தொகையான இளைஞர்களும் யுவதிகளும் வாழ்ந்து வருகின்றார்களாம். இதில் முன்னணியில் நிற்பது இத்தாலி.

15க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதுடைய இளவட்டங்கள் இங்கே வீட்டோடுதான். இங்கே வேலையிலடலாத் திண்டாட்டம் பெருமளவு அதிகரித்து, சம்பளத் தொகைகள் கீழிறங்கி,   பிட்ஸா விலை மும்மடங்காக எகிறிக் குதித்து,  வருமானத்தை விட கடன் சுமை அதிகமாக அழுத்தும் மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றது இத்தாலி. 26.9 வீதமானவர்களுக்கு இங்கே வேலை வாய்ப்புகள் இல்லையாம்.

சரி வேறு எந்த நாடுகளில் இநத நிலைமை?

போர்த்துக்கல்,  ஸ்பெயின், கிரேக்க நாடு,  சொல்வேனியா,  ஹங்கேரி,  செக் குடியரசு-இத்தனை நாடுகளிலும் 70 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் இன்னமும் தாய்வீட்டில்தானாம்.

கனடாவில்தான் மிகக் குறைந்த அளவில் அதாவது 30.9 வீதமானவர்கள் மாத்திரமே பெற்றோருடன் வாழ்கின்றார்கள்.

கனடாவை விட டென்மார்க்,  சுவீடன்,  நோர்வே,  பின்லாந்து ஆகிய நாடுகளிலும் 40 வீதத்திற்கு குறைவானவர்களே இன்னும் வீட்டுப் பிள்ளைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

நலிந்து விட்ட பொருளாதாரம் நாட்டையே மாற்றிவிட்டதே.

குழந்தைகள் இல்லாத விமான வலயம்..

கொஞ்சம் ஆறுதலாகக் கண்ணை மூடுவோம் என்றால் குழந்தையின் வீரிட்ட கத்தல். இந்த அனுபவம் உங்களில் எத்தனை பேருக்கு வந்துள்ளது? பலருக்கு விமானப் பயணங்களில் இதுகாலவரை இது ஒரு பிரச்சினையாகவே இருந்துள்ளது.

வந்துள்ளது புதிய நடைமுறை. இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமொன்று பிள்ளைகள் அற்ற பகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு அனுமதியில்லாத அமைதியான பிராந்தியம் இது.

ஒரு சாராருக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்  இன்னொரு சாராருக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை.  பக்கத்தில் ஒரு குழந்தை வீரிட்டலற,  ஆசனத்தின்  பின்னாலிருந்து ஒரு பிள்ளை காலால் உதைக்க இம்சையோடு உட்கார்ந்திருந்த பிரம்மச்சாரிகளுக்கு இது பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாற்றமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்த ஏற்பாட்டை மேலும் பல விமான நிறுவனங்கள் தொடர இருக்கின்றன….

08.10.16

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை…

tea

இன்று ஆசிரியர்களுக்கான உலக தினம்…ஐரோப்பிய நாடுகள் அக்டோபர்5இல் இத் தினத்தைக் கொண்டாடினாலும் அக்டோபர் 6 பல உலக நாடுகளில் ஆசியர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

குரு என்பவர் ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர். சமுதாயத்தின் நாளைய தூண்களை இன்று உருவாக்கும் பணிகளில் ஆசிரியரே முன்னிற்கிறார்.

மாதா பிதா குரு- இந்த மூன்றும் நமக்குத் தெய்வங்கள். நம் வாழ்வை நெறிப்படுத்த தீவிரமாக உழைப்பவர்கள் இந்த மூவருந்தான்.

ஒரு குறிக்கோள் இன்றி எவருமே செயற்படமுடியாது. அடுத்து என்ன செய்வது என் இலக்கு என்ன என்பது ஒருவருக்குத் தெரிந்திருந்தால்தான்,  அவரால் திட்டமிட்டு தெனது அடுத்த நகர்வை மேற்கொள்ள முடியும்.

இந்த உயர்ந்த பணியைச் செய்பவர் ஆசிரியர்தான். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை பொறுப்புணர்வோடு ஏற்று, அவர்களை சமூகத்திற்கு ஏற்றவர்களாக மாற்றும் பணிணை ஆசிரியரே செய்கிறார்.

இவரை ஒரு சிற்பி என்றுகூடச் சொல்லிவிடலாம்.  கல்லை நாம் கல்லாகவே பார்க்கின்றோம். ஆனால் சிறந்த சிற்பியின் கைகளில் அந்தக் கல் சிக்கிவிடும்போது அதுவே உயிரோவியமாகி விடுகின்றது.

களிமண் ஒரு நல்ல குயவனின் கையில் போகும்வரை,  அது வெறும் களிமண்ணாகவே நோக்கப்படும். ஆனால் ஒரு கைதேர்ந்த குயவனிடம் அது சென்றடையும்போது,  ஊருக்கெல்லாம் பயன்படும் அழகிய மண்பாண்டமாக அது உருப்பெற்று விடும்.

library

ஒரு மாணவனின் நிலையும் இ;ப்படித்தான். ஓர் நல்ல ஆசானிடம் சென்றடையும் மாணவன் படிப்படியாக மாற்றப்பட்டு ஏதோவொரு துறையில் சிறந்தவனாக உருவாக்கப்பட்டு விடுகிறான்.

ஆசிரியர் எனடபவர் ஒரு தொழிலைத்தான் செய்கின்றார். ஆனால் இந்தத் தொழிலாளி தன் திறனால் பல்வேறு தொழிலாளிகளை உருவாக்குவதுதான் இத் தொழிலின் தனிச்சிறப்பு. பொறியியலாளர்களாக இருக்கட்டும், பெரிய விஞ்ஞானிகளாக இருக்கட்டும், மருத்துவர்களாக இருக்கட்டும். அல்லது கணனி வல்லுனர்களாக இருக்கட்டும் ஆசிரியர்களே இவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துகின்றார்கள். ஒரு தொழில் பல தொழில்களை உருவாக்கும் அதிசயம் கண்டீர்களா?teacherday-266x200

1994ம் ஆண்டு முதல் அக்டோபர் 6ந் திகதியை உலக ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடி வருகின்றார்கள். எமக்குக் கல்விப் பிச்சை தந்து வளர்த்தெடுத்த அந்த உன்னத ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நன்றி சொல்லும் முகமாகவே இந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந்தார்

என்பவை குறள் வரிகள்.

தாம் கற்றதை ஏனையோருக்கும் கற்பிப்பதில் இன்பம் காண்பவர்கள் ஆசிரியர்கள் என்கிறார் வள்ளுவர் பெருமான். கற்போம் கற்பிப்போம் என்ற கொள்கையுடன் வாழ்பவர்கள் ஆசிரியர்கள். பெற்றதைப் பகிரும் இந்த உன்னத தொழில் ஓர் ஒப்புயர்வு இல்லாத தொழில் என்பது கண்கூடு.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்

என்று இன்னொரு இடத்தில் குருவை சீடன் எப்படி அணுக வேண்;டும் என்பதை கடுகைத் துளைத்து எழு கடலைப் புகுத்தி குறுகத் தறித்த தன் குறள் வரிகளில் விபரிக்கின்றார் வள்ளுவர் பெருமான்.

பலதையும் கற்றுயர்ந்த ஆசிரியர் முன்னால் எதையும் அறியாத பணிவுடன் மாணவன் அணுக வேண்டும் என்கின்றன குறள்வரிகள்.

ஒரு மனிதனை மனிதனாக மாற்றும் பண்பு கல்விக்கே உண்டு. மிருகங்களை மனிதர்களிடமிருந்து பகுத்து அறிய அவன் கற்ற கல்வியே உதவுகின்றது. அந்தச் சிறந்த கல்வியை மனிதருக்கு அளிக்கும் பொறுப்பு ஆசிரியர்களையே சார்ந்தது.

teachers-day

எனவே ஒரு நல்ல மாணவனை உருவாக்குவது மட்டுமன்றி,  நல்லதொரு உலகையும் உருவாக்கும் பொறுப்பான பணி ஆசிரியர்க்ள கையில்தான் இருக்கின்றது. உலகின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் இவர்கள் பணியானது உலகின் அனைத்து பணிகளையும் விட உயர்ந்தது என்பது நமக்கு நன்றாகவே புரிகின்றது.

இப்படியொரு பணியைச் செய்பவர் அதற்குண்டான தகுதியை முழுமையாகப் பெற்றிருத்தல் அவசியம். எனவே அரசு ஆசிரியர்களைத் தெரிவு செய்யும்போது தகுதியானவர்களைத் தெரிவு செய்வது மிக முக்கியம்.

சமீபத்தில் யாழ் மண்ணில் ஒரு பிரபல்ய பாடசாலையில் அதன் முதல்வர் பணி நிறுத்தத்தைச் சுற்றி நடந்த நிகழ்வுகளில் முழு யாழ்ப்பாணமும் அமர்க்களப்பட்டது. கல்வி கற்க வேண்டிய மாணவர்கள் பகிஷ்கரிப்பில் இறங்கினார்கள். நியாயம் வழங்க நீதிபதி,  சட்ட காவலர்கள் பாடசாலை முன்றலுக்குள் நுழையும் அவலம் உருவாகியது. இப்படியான நிகழ்வுகள் மாணவர்க்ள மத்தியில் இடம்பெறவே கூடாது. இது பாடசாலையின் பெயரைக் கெடுப்பதோடு,  படிக்க வந்த மாணவர்களையும் சீரழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கல்வியோடு நல்ல பண்புளையும் சொல்லித் தருபவர்கள் ஆசிரியர்கள்.  கற்போம் கற்பிப்போம் என்ற தாரக மந்திரத்தோடு உழைக்கும் இவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மிக முக்கியம். பெற்றோர்களுக்கு அடுத்து பிள்ளைகளின் இன்னொரு பெற்றோராகச் செயற்படும் இவர்கள் தம்மை நம்பி வந்த பிள்ளைகளை கல்வியில் சிறந்தவர்களாகவும்,  ஒழுக்கசீலர்களாகவும் மாற்றுவதில் முழுப் பங்களிப்பையும் வழங்க வேண்டும். இன்றைய உலகில் சில ஆசிரியர்கள் தமது கடமைகளைச் செவ்வனே செய்யாது,  மாணவர்களைத் தனியார் வகுப்புகளுக்கு வரச் செய்து உழைப்பதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது. தன் கடமை தவறுபவரை சமுதாயம் ஒருபோதும் மதியாது. மாறாக இழிச் சொற்களையே சம்பாதிக்க நேரிடும். உயரிய ஆசிரிய பணியிலும் கறை படியும்.

teachr

மாணவர்களை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஆசிரியர்கள் தாக்கக்கூடாது. ஆனால் பல சிறுசிறு குற்றங்களுக்காக பிள்ளைகள் ஆசிரியர்களால் தண்டிக்கப்படுவது ஆசிய நாடுகளில் பரவலாக இடம்பெறுவது வருந்துதற்குரியது. மாணவர்கள் பிரம்படி பெறுவது,  வேறு தண்டனைகள் பெறுவது இன்றும் தொடர்கின்றது.

இது அவசியம் ஆசிரியர்களால் நிறுத்தப்பட வேண்டும்.

பாடசாலையில் கற்பிக்கின்ற ஒரு சில ஆசிரியர்கள் ஒழுங்கான முறையில் கற்பிக்காதும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தாதும் விடுவதுடன் தனியார் கல்வி நிலையங்களில் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கின்றனர்.மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கும் சம்பளத்திற்கு விசுவாசம் காட்டாது அதனை உத்தியோகமாக வைத்துக் கொண்டு தனியார் துறைகளில் மக்களை சுரண்டி உழைக்கின்றனர்.

இதுவும் அவசியம் ஆசிரியர்களால் நிறுத்தப்பட வேண்டும்.

தொழிலுக்கு பொருந்தாதவர்கள் எங்கேதான் இல்லை? பிழையான வழியில் செல்லும் ஒரு சிலரை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்தமாக அந்தத் தொழிலைக் குறைகூறுவது நன்றன்று.  இவர்கள் திருந்த வேண்டும். இந்த உன்னத பணி ஒப்புயர்வற்ற குடிமக்களை உருவாக்;க வேண்டும். அதுவே நமது ஆசை…

06.10.2016

வாசிப்பதை நேசிப்போம்

 

reading-booksவாசிப்பது இன்று எந்த நிலையில் இருக்கின்றது? இலங்கையில் வாசிக்கும் பழக்கம் வளர்கிறதா? இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வாசிப்பவர்கள் அருகி வருகின்றார்களா?

நிறையக் கேள்விகள் பிறக்கின்றன. இவற்றிற்கான பதில்களையும் நாம் தேடத்தான் வேண்டும்.

வருடாவருடம் இலங்கை ஒக்டோபர் மாதத்தை வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் மாதமாகப் பிரகடனப்படுத்தியிருப்பது நமக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு செய்திதான். காலத்திற்குக் காலம் குறைந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை இளைஞர் யுவதிகளிடையே அதிகரித்து வைக்கää இப்படி ஒரு நிகழ்வு வருடா வருடம் இடம்பெறுவது போற்றுதற்குரியதே.

றிறைய வாசியுங்கள் என்று நாம் ஒருவருக்குச் சொல்லும்போது நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டியது அவசியமாகின்றது.

வாசிப்பது என்பது மூளை வளர்ச்சிக்கான ஒரு பயிற்சி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் கால், கை போன்ற உடல் உறுப்புகளுக்கு பயிற்சி அளிப்பது போல மூளை விருத்திக்கும் பயிற்சி கொடுப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களைச் செய்து பார்ப்பது, விளையாடுவது போன்றன மூளையை நல்ல நிலையில் வைத்திருக்க உதவி வருகின்றன. உபயோகி அல்லது அதை இழந்து விடு என்பார்கள். மூளைக்கு இது நன்றாகவே பொருந்தும். அதை உபயோகித்தால்தான் அதன் திறன் பல்கிப்  பெருகும். எனவே நமக்கு சுலபமாகக் கிடைக்கும் பயிற்சி வாசிப்பு. நிறைய வாசிப்பதால் மூளை தானாகவே பலமானதும்,  ஆரோக்கியம் மிக்கதுமாக மாறுகின்றது.

அடுத்து இந்த வாசிப்பு உங்கள் மன அழுத்தத்தை ஓட ஓட விரட்டுவதில் படு கில்லாடி என்பது உங்களுக்குத் தெரியுமா? வேலைப் பளு,  குடும்பப் பிரச்சினை அல்லது வேறு எந்தச் சுமையாவது உங்களை அழுத்தும்போது உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாவல் ஒன்றின் பக்கங்களைப் புரட்டுங்கள். அதன் பக்கங்களில் உங்களையே நீங்கள் மறக்கும்போது,  இருந்த இடம் தெரியாமல் மனம் அழுத்தம் அடித்துத் துரத்தப்பட்டு விடும்.

வாசிப்பு ஒன்றால்தான் உங்கள் அறிவைப் பெருக்க முடியும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் அறிவு இந்த வாசிப்பால் பெருகப் பெருக நீங்கள் வாழ்வின் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்று விடுவது திண்ணம். உங்கள் பணத்தை இழக்கலாம்,  செய்யும் வேலை பறிபோகலாம். உடல் நலம் கெடலாம். ஆனால் வாசித்தறிந்த கல்வி உங்களை விட்டகல்வது என்பது அசாத்தியமானது. கண்டதும் கற்க பண்டிதன் ஆவான் என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகின்றதா?220px-jaffnalibrary1

பற்கள் இன்றி உணவை அரைத்து மென்று விழுங்க முடியாது. சொற்கள் இன்றி வளமான வாக்கியங்களை அமைக்க முடியாது. உங்கள் சொல் அறிவை வளர்ப்பது இந்த வாசிப்பு ஒன்றுதான். சொல்வளம் இருந்தால்தான் நாம் பேசும்போதோ,  எழுதும்போதோ  பிறர் பாராட்டும் வழியில் நடந்து கொள்ள முடியும். வளமில்லாத மண்ணின் பயிர்கள் செழித்து வளராமல் கருகுவதுபோல,  சொல்வளம் இல்லாத எம் மொழி அறிவு நாளடைவில் பயனற்றதாகி விடும்.

உங்கள் ஞாபக சக்தியை வளர்ப்பதையும்; இந்த வாசிப்பு பழக்கமே செய்து வருகின்றது. ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கி அதை முடிக்கும் வரை கோர்வையாக வரும் பல பாத்திரங்களை,  நிகழ்வுகளை நம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியுள்ளது. அல்லது எம்மால் இந்த நாவலை வாசித்து முழுமையாக ரசிக்க முடிவதில்லை. எனவே வாசிப்பின்போது மூளை கிரகிக்கும் விடயங்களை நேரத்திற்கு நேரம் நம் நினைவில் கொணர்ந்து படிப்பதைச் சுவைக்க கைகொடுக்கின்றது.

ஏன் வாசிக்க வேண்டும் என்பது இப்பொழுது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் . இனியும் நீங்கள் வாசிக்க பின்வாங்கலாமா? கூடவே கூடாது.

யாழ் மண்ணில் இணுவில் பொது நூலகம் செய்த ஏற்பாட்டில் ஒக்டோபர் மாத்தின் முதல் நான்கு நாட்களும் புத்தகக் கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டன. உங்களில் எத்தனை பேர் இந்தக் கண்காட்சிக்குப் போயிருந்தீர்கள்? இலங்கையின் தேசிய வாசிப்பு மாதத்தில் யாழ் மண்ணில் இப்படியொரு நிகழ்வு நடந்தமை பாராட்டுக்குரியதே.

சமீபத்தில் யாழிலுள்ள நூலகம்  ஒனறிற்குச் சென்றிருந்தேன். பத்திரிகைகளை பலர் ஆர்வமாக வாசிப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அனேகமானவர்கள் நடுத்தர வயதைத் தாண்டியவர்களாகவே இருந்தார்கள். அங்கே ஓர் இஞைன் எனக்கு முன்னே உட்கார்ந்திருந்தார். நான் அங்கே செலவிட்ட 90 நிமிட நேரம் அந்த இளைஞரும் எனக்கு முன்புதான் உட்கார்ந்திருந்தார். நான் பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருக்க அவர் தன் கைபேசியோடு நேரத்தைக் கழித்துக் கெர்ணடிருந்தார். தனக்குள் சிரித்துக் கொண்டு குறுஞ்செய்திகள் அனுப்புவதும்,  பதில்களை வாசிப்பதுமாக அவர் பொழுது போய்க்கொண்டிருந்தது. அவரைச் சுற்றிலும் பல சஞ்சிகைகள். பல பத்திரிகைகள். ஆனால் அவரது தேடலில் அவை இல்லை.

இது ஒரு சிறிய உதாரணமே.. இன்றைய யதார்த்தமும் அதுதான். வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதை விட,  கைத்தொலைபேசியோடு விளையாடுவதையே இன்றைய இளம் சமுதாயம் நேசிக்கின்றது. வாசிப்பை நேசிப்பவர்கள் வளர்வதாகத் தெரியவில்லை.

கசக்கும் நிஜந்தான். என்ன செய்வது? யதார்த்தம் அதுதானே.

யாழ் மண்ணின் நூலகம் உலகப் பிரசித்தமானது. விலைமதிக்க முடியாத பல அரிய நூல்களை அடக்கிய இந்த நூலகம் 1981ம் ஆண்டு ஜூன் முதலாந் திகதி தீயின் நாக்குகளுக்கு இரையாகியது. ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒனறாகத் திகழ்ந்த இந்த யாழ் பொதுஜன நூலகம் காடையர்களால் எரிக்கப்பட்டபோது பல சுவடிகளும்,  97,000க்கு மேற்பட்ட நூல்களும் இங்கு இருந்துள்ளன.1933இல் சிறிதாக ஆரம்பித்து, 1953இல் அன்றைய நகரபிதாவாக இருந்த அல்பிரெட் துரையப்பா திறந்து வைக்க,  கட்டடம் நவீனமயமாகி, உலகம் வியக்கும் ஒரு நூலகமாக அது மாறியது.

1981 மே31 அன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நடத்திய பேரணி ஊர்வலத்தில்,  மூன்று சிஙகளப் பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட,  அதைத் தொடர்ந்து வெடித்த இனக்கலவரத்தில் அழிக்கப்பட்டவற்றுள் இந்த நூலகமும் உள்ளடங்கியது.jaffnalibrary1-edit1

பல வர்த்தக நிலையங்கள், வீடுகள்,  இந்துக் கோவில்,  கட்சித் தலைமையகம்,  ஈழநாடு பத்திரிகை அலுவலகம், கலாச்சார சிலைகள் என்று பல அழிக்கப்பட்டாலும்,  பல அரிய ஆவணங்களையும், நூல்களையும் கொண்டிருந்த மாபெரும் நூலகம் ஒன்று எரியூட்டப்பட்டது தமிழ் பேசும் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகவே அமைந்தது.

இன்று இந்த நூலகம் பல அந்நிய நாடுகளின் பண உதவியுடன்ää குறிப்பாக அமெரிக்கா அளித்த ஒரு மில்லியன் டாலர் பண உதவியுடன்,  2003இல் புது மெருகுடன்  மீண்டும் தலைநிமிர்ந்து நிற்பது மனதுக்கு சற்றே ஆறுதல் அளித்தாலும், எரிந்தவை அழிந்தவை இனி என்றுமே கிடைக்கப் போவதில்லை.

இன்று வாசிப்பு முறை மாறியிருப்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். கணனி அறிமுகமாகி,  இணையம் வந்தபின்பு,  தேடும் இயந்திரங்கள் பல தேடுதல்களை நம் விரல் நுனிக்குக் கொண்டு வந்துவிட்டன. தூக்க முடியாமல் தூக்கி வந்து மேசையில் வைத்து அதன் ஆயிரக் கணக்கான பக்கங்களைப் புரட்டிய காலம் போய்,  ஒரு கிளிக்குடன் பல தகவல்களை அறிய முடிகின்ற விக்கிபீடியா போன்ற பக்கங்கள் வந்துவிட்டன.

பல நாவல்களைத் தரவேற்றிய  நிலையில் கையடக்கமான மின்னூல்கள் வந்து சேர்ந்து விட்டன. எந்தப் பத்தரிகையையும் நினைத்த நேரத்தில் வாசிக்கும் வசதிகள் நம்மை வந்தடைந்து விட்டன.

இவை வாசிப்பு பழக்கவழக்கங்களை அதிகரிக்கச் செய்கின்றனவா?

இல்லை என்ற பதில்தான் வருகின்றது. நுனிப்புல் மேய்வது போன்ற ஒரு நிலைதான் அது. பசிக்கு பட்டடென மக்டொனால்ட்ஸ் உணவகத்தினுள் நுழைந்து,  உணவை வாங்கிக் கொண்டு நடந்து நடந்து சாப்பிடுவது போன்ற நிலைதான் இது. அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை கண் பார்க்க,  இயந்திரத்தனமாக சான்ட்விச் ஒன்றை வாய்க்குள் தள்ளும் நிலைதான் இது.

மேசையில் உட்கார்ந்துஆறுதலாக உணiவைப் பார்த்து ரசித்து சாப்பிடும் நிலை இங்கு இருக்கின்றதா? அச்சிடப்பட்ட நூல் ஒன்றையோ,  அல்லது தினசரி ஒன்றையோ கையில் எடுத்து ஆறுதலாக வாசிக்கும் சுகம் வேறு எங்கு கிடைக்கின்றது?

reading

காலம் மாறுகின்றது. அது போடும் கோலங்களும் வேறுபடுகின்றது. நாம் வெறும் பழசுகளாவே காலமெல்லாம் இருந்து விட முடியாது என்ற வாதங்கள் எழுவதை நாம் தடுக்க முடியாது.

ஒன்று மட்டும் முக்கியம். வாசிப்பதை கைவிட்டு விடாதீர்கள். அது எந்த வழியிலாவது இருந்து விட்டுப் போட்டும். உங்கள் நல்ல நண்பனான நூலை கண்டும் காணாதவர்கள் போல் இருந்து விடாதீர்கள்.

ஒருவனது நண்பனை வைத்து இன்னொருவர் அவனை எடைபோட்டு விட முடியுமாம். அது மட்டுமல்ல  ஒருவர் வாசிப்பதை வைத்தும் அவர் எப்படியானவர் என்பதை இன்னொருவரால் சொல்லி விட முடியும்.

வாசிப்பதை நேசிப்போம்  வையகத்தில்  வளர்வோம்

05.10.16

மின்னியல் நிறுவனத்திற்கு பொல்லாத காலம்

 

burnt-washing-machine

அப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட்டுக்கொண்டு தனது கைபேசிகளால் பெருமளவு வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்து வரும் சம்சுங் நிறுவனத்திற்கு பொல்லாத காலம் பிறந்திருக்கின்றது போலும்.

பெரிய விளம்பரங்களுடன் அப்பிளின் ஐபோன்7 வருவதற்கு முன்பாக தனது புதிய சாம்சுங் நோட்7ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம். ஆனால் எதிர்பாராத விதமாக மின்னூட்டலின் போதுää கைபேசிகள் வெடித்துச் சிதறää சந்தையிலிருந்து இந்த ஸ்மார்ட்போன்களை முற்றாக அகற்றும் அவல நிலை இந்தக் கொரிய நிறுவனத்திற்கு வந்து சேர்;ந்தது.

இது பழைய கதை. இப்பொழுது சம்சுங் உற்பத்தியில் வெளிவரும் ஆடை கழுவும் இயந்திரமொன்று வெடித்து புதிய பிரச்சினையைக் கிளப்பியிருக்கின்றது.

மார்ச் 2011க்கும் ஏப்ரல் 2016க்கும் இடையில் உற்பத்தி செய்யப்பட்ட சில இயந்திரங்களில்தான் இந்தக் கோளாறாம்.

பெரிய குண்டு வெடித்தாற் போல வெடிப்பு ஏற்பட்டது.  என்னுடைய 4 வயது மகன் இந்திரம் இருந்த இடத்திற்கு அருகாமையில்தான் இருந்திருக்கிறான். நான் அலறிக் கொண்டு ஓடிச் சென்று அவனை இழுத்து வந்தேன் என்று அதிர்ச்சியோடு சம்பவத்தை விபரிக்கி;னறார் அமெரி;க்காவின் ஜோர்ஜியா மாவட்டத்தைச் சேர்ந்த மெலிஸா என்ற பெண்மணி. இவர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். ரெக்ஸாஸ்ää இந்தியானா மாவட்டங்களிலும் இயந்;திரங்கள் வெடித்துள்ளன. இங்கேயும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

2.5 மில்லியன் கலக்ஸி நோட்7 ரக கைபேசிகளை சந்தையிலிருந்து அகற்றிய சு10டு ஆறமுன்னர்ää இன்னொரு குண்டு இவர்கள் தலையில் விழுந்திருக்கின்றது. பனையால் விழுந்தவன் தலையை மாடேறி மிதித்த கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

 

world-heart-day-walk-2014

இதயம் வலிக்கிறதே

 

பத்திரிகை செய்திகளைப் பார்த்தால் வருடத்தின் 365 நாட்களையும் ஏதோவோன்றிற்காக ஒதுக்கி விடுவார்கள் போலிருக்கின்றது . கடந்த மாதம் 29ந் திகதி  இதயத்திற்காக ஒதுக்கப்பட்ட தினம்.

2000மாவது ஆண்டில் முதற் தடவையாக இத் தின அனுஷ்டிப்பு ஆரம்பமாகி  இருக்கின்றது .

இன்றைய மரணங்களில் உயிரைப் பறிக்கும் இருதய வியாதிகள்தான் அதிகம் பேரைக் கொல்வதால், இப்படி ஒரு நாளை ஒதுக்கி அந்த நாளில் இதய வியாதிகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது சாலப்பொருத்தமானதாக .இருக்கின்றது .

சாகவேண்டிய  வயதில்  சாகாமல் அநியாயமாக இறந்து போனாரே என்று கவலைப்படவைக்கும் இந்த ஆட்கொல்லி இதய வியாதிகள் ஒவ்வொரு  வருடமும் 17.5மில்லியன் உயிர்களை உலகெங்கும் பறித்து வருகின்றன . இதில் அமெரிக்கா முதலிடத்தை பிடிக்கின்றது .2030 இல்  இத் தொகை 23மில்லியனை  எட்டிப் பிடிக்குமாம்

இளையவர்  மூத்தவர் என்று வயது வேறுபாடின்றி கொல்லும் இதய நோய்களில் இருந்து நாம் தப்புவதாயின் மதுபானம், சிகரெட் என்பவற்றை விலக்கி, சீரான உணவுண்டு உடல் பயிற்சிகளை செய்வதுதான் ஒரே வழி

volcano

செல்பிபுள்ள……..

செல்பிபுள்ள  செல்பிபுள்ள  என்று ஒரு சினிமா பாடலின் முதல் வரிகள் உங்கள் ஞாபகத்திற்கு  வருகின்றதா ? அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு செல்பிகள் எடுக்கும் பைத்தியம்  இன்று உலகெங்கும் வேகமாகப் பரவும் ஒரு நாகரீகம் .

மலை உச்சியில் நின்று பொங்கி வரும் அலைகள் நடுவே நின்று  சாகசம் செய்பவர்கள் போல் செல்பி எடுப்பவர்கள் தமது உயிரை அநியாயமாக இழப்பவர்கள் பலர் நம்மிடையே இருக்கின்றார்கள் .

இந்தோனேசியாவில் உள்ள லொம்போக் என்ற தீவில் இரட்டை முகடுகள் கொண்ட 3700 மீட்டர் உயரமான ரின்ஜானி என்ற எரிமலை சமீபத்தில் வெடித்து குழம்பைக் கக்கியுள்ளது . இந்த நேரத்தில் அங்கிருந்த ஆயிரம் பேர் வரையிலான உல்லாசப்பயணிகளில் பெரும் பகுதியினர் பாதுகாப்பான தப்பி வந்து விட்டாலும் 200பேர் வரையிலான சாகச விரும்பிகள் சீறும் எரிமலையுடன் தங்களையும் சேர்த்து தீவிரமாக செல்பி  எடுத்துக் கொண்டிருக்கின்றார்களாம். எப்படிப்பட்ட பைத்தியங்கள்  பார்த்தீர்களா ?

எரிமலையைக் குறிக்கும்  “வால்கனோ” (volcano) என்ற சொல் இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக் கடவுளான வால்கன் என்னும் பெயரிலிருந்து பெற்றதாகும்.

facebook

முகநூலுக்கு ஒரு தடா

சமூக வலைத்தளங்கள் என்ற பெயரில் முகநூல் , Whats App கோடிக்கணக்கானவர்களைக் கவர்ந்திழுத்து வருவது நமக்கு புதினமல்ல . உலகின் முதல் இடத்தில் நிற்கும் முகநூல் சமூகத் தளம் Whats App நிறுவனத்தை பத்து பில்லியன் பவுண்ட்ஸ் தொகைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியதும் பழைய கதை . இப்பொழுது புதிய புதினம் என்னவென்றால்  ஜெர்மனியில்  உள்ள  35 மில்லியன் Whats App பாவனையாளர்களின்  தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதை முகநூல் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

பாவனையாளர்களின் தனியுரிமையை கட்டுப்படுத்தும் ஜெர்மன் நிறுவனமே இப்படிக் கூறியுள்ளது .முகநூலின் ஜெர்மன் தலைமையகம் ஹம்பர்க் நகரில் இருப்பதால் அங்குள்ள கட்டுப்படுத்தும் அமைப்பே இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது .

01.10.16

 

 

 

ஆள் பாதி ஆடை பாதி

dress-code

அப்பாடா கொஞ்ச நாள் சூடு பிடித்து பத்திரிகைகளுக்கும் தீனி போட்டு வந்த பள்ளி ஆடை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எதை அணிவது எதை அணியக்கூடாது என்பதை பாடசாலைகள் தீர்மானிக்க முடியாது. அப்படியான தீர்மானங்களை  பாடசாலை நிர்வாகம் எடுக்கவே முடியாது என்று கல்வி அமைச்சு அதிகாரபூர்வமாக விதித்த தடையுடன் இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கையின் பிரபல்யமான ஆண்களுக்கான ஒரு தனியார் கல்லூரியின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்தான் பிரச்சனைகளுக்கு முதல் அத்தியாயம் எழுதி வைத்தது.

நாங்கள் உடு;த்துவதை தீர்மானிக்க நீங்கள் யார் என்று பெரிய இடங்களில் கூப்பாடுகள்! .சேலைகளை உடுத்தலாம்  ஆனால் பாவாடைகள் கட்டக்கூடாது. கையில்லாத மே;றசட்டைகள் அணியக்கூடாது என்றெல்லாம் புதுவிதிகள்.

இது இலங்கைக்கு புதிய கதையல்ல.

பல அரச பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் தமக்கு திருப்தியில்லாத ஆடைகள் அணிந்து வந்ததை கண்டித்து அவர்களைத் திருப்பி அனுப்பியது பல தடவைகள் சம்பவத்திருக்கின்றது.

கல்வி அமைச்சர் காரியவாசம் சகல பாடசாலைகளுக்கும் சுற்றுநிருபம் அனுப்பியிருக்கின்றார். எந்தத் தாய்க்கும் ஒரு பாடசாலைக்கு வரும்போது எதை அணிய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். உலகம் நன்றாக மாறிப் போயிருக்கின்றது. நாமும் அதற்கு இசைவாக மாறவேண்டி உள்ளது என்று காரணம் காட்டி, பாடசாலை நிர்வாகம் பிள்ளைகளின் பெற்றோரின் ஆடை விடயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று தடையுத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

ஒரு வேலைக்குச் செல்லும் தாய் சீருடையோடு வந்து தன் பிள்ளையை பாடசாலையில் விட்டுச் செல்லலாம்.இன்னொரு தாய் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராக மேற்கத்தய ஆடையணிந்து வரலாம்.

இதைத்தான் அணிவது என்று எப்படி நாம் பெற்றோரை நிர்ப்பந்திக்க முடியும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.

dress

இந்த போஸ்டர் முதலில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிச் சுவரில்தான் ஒட்டப்பட்டது. பின்பு இதே சுவரொட்டி இன்னொரு பிரபல்ய ஆண்கள் கல்லூரியான புனித பீட்டர்ஸ் கல்லூரியில் ஒட்டப்ட்டது. மொத்தம் 16 போட்டோக்கள், பதினாறு வேறுபட்ட ஆடைகளுடனான பெண்களுடன் காணப்பட்டன. இதில் எதை அணியவேண்டும் என்பதற்கு போட்டோவுக்கு பக்கத்தில் சரி போடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை கேலிபடுத்தி முகநூலிலும் எழுதியிருந்தார்கள்.

ஜீன்ஸ் வேண்டாம், இறுக்கமான லெக்கின்ங்ஸ் வேண்டாம். ஆனால் பெண்ணின் வயிற்றுப்பகுதியைக் காட்டும் சேலை ஓகே. நாம் வாழும் நாடு ஒரு வெப்பவலய நாடு என்பதை இவர்கள் அறிவார்களா? சரி பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும் அப்பாக்களுக்கு இந்த ஆடை விடயத்தில் எந்தக் கட்டு;ப்பாடுகளும் இல்லையா என்று முகநூலில் யாரோ ஒருவர் எழுதியிருந்தார்.

பெண்கள் கல்லூரியொன்றில் கொழும்பில் கல்வி  கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் பீபீசிக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்கிறார்.

பல பெற்றோர்கள் குறி;ப்பாக இளம் தாய்மார்கள் பொருத்தமற்ற ஆடைகள் அணிந்து ஆண்கள் கல்லூரிகளுக்குள் நுழைகிறார்கள் என்று  குற்றஞ் சாட்டியுள்ளார்.

 

ஆள் பாதி ஆடை பாதி என்கிறார்கள். இது பெண்களுக்கே கூடுதலாகப் பொருந்துவது. உடுத்துபவர் அழகனாகவோ அழகியாகவோ இருந்தாலும், அவர் ஆடை அணிகலங்கள் அவருக்கு மேலும் அழகூட்டுவது இயல்பு. கிழிந்த கந்தலோடு வருபவரையும் அழகான ஆடை அணிந்து வருபவரையும் சற்றே நினைத்துப் பாருங்கள்.

அழுகுக்கு அழகூட்டுபவைதான் ஆடை அணிகலன்கள்.

அரைகுறையான படிப்பும் ஆபத்து. அரைகுறையாக ஆடை அணிவதும் ஆபத்து. அரைகுறையாக ஒன்றை விளங்கி அதைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் நிச்சயம் பொல்லாப்பைக் கொண்டு வரும்.

_79533795_sari

 

பெற்றோர் இதைத்தான் அணிய வேண்டும் என்று இன்னொருவர் தடையுத்தரவு பிற்ப்பிப்பது கொஞ்சம் காட்டுமிராண்டித்தனமாகத்தான் தெரிகின்றது. ஆனால் ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தால் ஏனிந்த போஸ்டர்கள் முளைத்தன என்று தெரியவந்துவிடும். அந்த அளவுக்கு ஆராய்;ச்சியை மேற்கொண்ட சிலரால்தான் இந்தப் போஸ்டர்கள் அச்சிடப்பட்டனவோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.

 

நெருப்பு தணிக்கப்பட்டு விட்டாலும் எங்கோ இந்த விவகாரம் புகைந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது.

01.10.16

 

 Page 1 of 65  1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

புதினப் பூங்கா 08.10.16

புதினப் பூங்கா 08.10.16

பச்சிளம் குழந்தைக்கு ஏனிந்தத் தண்டனை? [Read More]

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை…

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை…

இன்று ஆசிரியர்களுக்கான உலக தினம்…ஐரோப்பிய [Read More]

வாசிப்பதை நேசிப்போம்

வாசிப்பதை நேசிப்போம்

  வாசிப்பது இன்று எந்த நிலையில் [Read More]

மின்னியல் நிறுவனத்திற்கு பொல்லாத காலம்

மின்னியல் நிறுவனத்திற்கு பொல்லாத காலம்

  அப்பிள் நிறுவனத்துடன் போட்டி [Read More]

ஆள் பாதி ஆடை பாதி

ஆள் பாதி ஆடை பாதி

அப்பாடா கொஞ்ச நாள் சூடு பிடித்து [Read More]

Popular Topics

Insider

Archives